Sunday, August 16, 2020

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 41

 * யார் காரணி* !!!

 ஒரு துறவி இருந்தார்,   அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார் .

 எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார்.அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார்.

 அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

 இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே,  பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார் என்று குழப்பம் எழுந்தது.

 துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் தங்கள் குருவான அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

 மேலும் நம் குருநாதருக்கு,  தான் ரொம்ப அழகு என்று நினைப்பு!  அதனால்தான் அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசித்துக்

கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டனர்.

 சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை .

 இவ்வாறு இருக்க,

 ஒருநாள் அந்நாட்டு மன்னன் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தான்.

அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கிய போது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 இப்பொழுது மன்னனுக்கு அதிர்ச்சி!

" சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர் ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன?  என்று அவரிடம் கேட்டான் மன்னன் .

 துறவி சிரித்தார்.

" இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது,  அவர்கள் கேட்கவில்லை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான  காரணத்தை மன்னனிடம் சொன்னார் .

 மேலும் எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும்.

எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன்.

'இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன் .அதில்  நான் தெரிவேன் .இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன் .

 கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்,  பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன் .

 அங்கே அந்தக் கண்ணாடியில் என் உருவம் தோன்றும் எனவே  என் பிரச்சனைக்கு நானே முதல் காரணம் என்று புரிந்து கொள்வேன்.

 சரி,  பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன் .

 எனவே, என் பிரச்சினையை யாரோ   வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல்,  நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன் .

 எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும் தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது .

என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி .

 அன்பிற்கினிய உறவுகளே நம் வளர்ச்சிக்கும் நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும் .

 வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல

 மிகவும் எளிமையானது.

 அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில் உள்ளது.*

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 40

 ஒரு   மரத்திலே    புஷ்பத்திலிருந்து தான்   காயும், பழமும்    உண்டாகின்றன..

புஷ்பமாக   இருக்கும் போது மூக்குக்கும்,    பழமாக   இருக்கும்   போது   நாக்குக்கும்    ரஸமாக    இருக்கின்றன.

பழம்   நல்ல   மதுரமாக   இருக்கிறது..  இந்த   மதுரம்   வருவதற்கு   முன்   எப்படி   இருந்தது?   பூவில்   கசப்பாகவும்,   பிஞ்சில்   துவர்ப்பாகவும்,   காயில்   புளிப்பாகவும்,   கனியில்   மதுரமாகவும்   இருக்கிறது..

மதுரம்    என்பது   தான்  சாந்தம்..   சாந்தம்   வந்தால்   எல்லாப்    பற்றும்  போய் விடுகிறது..    பழத்தில்   மதுரம்   பூராவாக   நிரம்பிய  உடனே கீழே   விழுந்து  விடுகிறது..   அது போல்,   இருதயத்தில்   எல்லா   இடத்திலும்   மதுரம்    வந்து   விட்டால்    தானாகவே   எல்லாப் பற்றும்    போய் விடும்..

புளிப்பு   இருக்கும்  வரை   பற்றும்   இருக்கும்..   அப்போது   காயைப்  பறித்தால்   காம்பில்   ஜலம் வரும்.   காயிலும்   ஜலம்   வரும்.    அதாவது,   மரமும்  காயை   விட்டு விட   விரும்பவில்லை.   காயும்   மரத்தை  விட்டு விட   விரும்பவில்லை..

ஆனால்,  நிறைந்த   மதுரமாக  ஆகி விட்டால்,   தானாகவே  பற்றும் போய் விடும்.   பழமும்   இற்று விழுந்து விடும்..   அதாவது,   மரமும்  பழத்தை வருந்தாமல்   விட்டு விடுகிறது..   பழமும்   மரத்தைப்   பிரிய   வருந்துவதில்லை..

படிப்படியாக   வளர்ந்து   மதுர மயமாக   ஆகி விட்ட   ஒவ்வொருவனும்    இப்படியே   ஆனந்தமாக    சம்சார   விருட்சத்திலிருந்து    விடுபட்டு விடுவான்..

பழமாக    ஆவதற்கு   முன்   ஆரம்ப தசையில்   புளிப்பும், துவர்ப்பும்   எப்படி    வேண்டியிருக்கின்றனவோ,  அதைப்   போல  காமம், வேகம், துடிப்பு   எல்லாம்   வேண்டியிருக்கின்றன..

இவற்றிலிருந்து   நாம்   ஆரம்ப  தசையில்   பூரணமாக    விடுபட முடியாது..   ஆனாலும்   இவை   எல்லாம்    ஏன்   வருகின்றன?   என்று   அடிக்கடி   நினைத்தாவது பார்க்க வேண்டும்...

இப்போது   இன்ன  உணர்ச்சி   வந்ததே!   ஆசை   வந்ததே!   கோபம்  வந்ததே!   பெருமை   வந்ததே!   பொய்   வந்ததே! இதனால்   ஏதாவது பிரயோஜனம்   உண்டா?   இந்த   உணர்ச்சி   அவசியமாக   வருகிறதா?   அனாவசியமாக  வருகிறதா?   என்று   நினைத்துப் பார்க்க வேண்டும்..    அப்படி   நினைக்கவில்லை   என்றால்   அவை   நம்மை  ஏமாற்றி விடும்,  ஏமாந்து விடுவோம்..

புளிப்பு   இருக்க  வேண்டிய   சமயத்தில்   புளிப்பு   வேண்டும்,  துவர்ப்பு   இருக்க வேண்டிய   சமயத்தில்   துவர்க்க  வேண்டும்..

ஆனாலும்,   அந்தந்த   நிலையோடு  நிற்காமல்,   பிஞ்சு   படிப்படியாகப்   பழமாகிக்   கொண்டே   வருவதைப்  போல,   நாமும்   மேலும்  மேலும்   மாதுரியமான   அன்பையும்,  சாந்தத்தையும்    நினைத்துக் கொண்டே   வந்தால்   நாமாகப்   போய்   மோட்சத்தைத்   தேட வேண்டாம்..

எந்தப்   பருவத்தில்   எப்படி   இருக்க வேண்டுமோ   அப்படி   இருந்தால்,   தானாகவே   மோட்சம்    என்ற   மதுர நிலை   வந்து விடும்...

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 39

 #வாழ்க்கையில் 
எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்..


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

பின்பற்றுங்கள்...வெற்றிபெறங்கள்...


Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 38

 தமிழாசிரியர் (முதல் நாள் வகுப்பில்) : தம்பிகளா! நீங்க எந்த வகுப்புல எப்படி வேணாலும் பேசுங்க. ஆனா, என் வகுப்புல மட்டும் கண்டிப்பா தூய தமிழ்லதான் பேசணும், பதில் சொல்லணும். புரியுதா?


மாணவர்கள் : சரி ஐயா!

ஆசிரியர் : பச்சை சட்டை போட்ட தம்பி! உன் பெயர் என்ன?

மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை ஐயா!

ஆசிரியர் : என்னப்பா சொல்றே ? புரியலையே ?

மாணவன் : என் பெயர் கௌ சிக் ஐயா!

ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்னப்பா?

மாணவன் : எங்கப்பா பேரு சுடுசோறு ஐயா!

ஆசிரியர் : மறுபடியும் குழப்பாதே தம்பி ! சரியா எனக்குப் புரியறமாதிரி சொல்லு.

மாணவன் : புரியலையா ஐயா ? என் தந்தையின் பெயர் ஆராவமுதன்.

ஆசிரியர் : நீங்க தமிழ்ல சொன்னதெல்லாம் போதும். எனக்கு தலை சுற்றுகிறது. ஆங்கிலத்திலேயே சொல்லுங்கள். உன் பேரு என்னம்மா ?

மாணவி : என் பெயர் லேடி ஸ்பின் பவுலர் ஐயா !

ஆசிரியர் : ஐயோ முடியலம்மா ! அப்படீன்னா என்னம்மா ?

மாணவி : என் பெயர் பால திரிபுர சுந்தரி ஐயா!

ஆசிரியர் : ஆ ஆ ஆ ஆ . . . .. . .

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 37

 ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை..! மகாபாரதம் போடும் விடுகதைக்கு விடை தெரியுமா?

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின்_உரிமையாளரோ, "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்! ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்..

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன." அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில், பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 36

 எது கெடும் ?!?


01) பாராத பயிரும் கெடும்.

02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

03) கேளாத  கடனும் கெடும்.

04) கேட்கும்போது உறவு கெடும்.

05) தேடாத செல்வம் கெடும்.

06) தெகிட்டினால் விருந்து கெடும்.

07) ஓதாத கல்வி கெடும்.

08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

09) சேராத உறவும் கெடும்.

10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.

12) நயமில்லா சொல்லும் கெடும்.

13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

15) பிரிவால் இன்பம் கெடும்.

16) பணத்தால் அமைதி கெடும்.

17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

18) சிந்திக்காத செயலும் கெடும்.

19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.

22) முறையற்ற உறவும் கெடும்.

23) அச்சத்தால் வீரம் கெடும்.

24) அறியாமையால் முடிவு கெடும்.

25) உழுவாத நிலமும் கெடும்.

26)உழைக்காத உடலும்  கெடும்.

27) இறைக்காத கிணறும் கெடும்.

28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.

32) துணையில்லா வாழ்வு கெடும்.

33) ஓய்வில்லா முதுமை கெடும்.

34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

35) அளவில்லா ஆசை கெடும்.

36) அச்சப்படும் கோழை கெடும்.

37) இலக்கில்லா பயணம் கெடும்.

38) இச்சையினால் உள்ளம் கெடும்.

39) உண்மையில்லா காதல் கெடும்.

40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.

42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

43) தூண்டாத திரியும் கெடும்.

44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

45) காய்க்காத மரமும் கெடும்.

46) காடழிந்தால் மழையும் கெடும்.

47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.

48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.

49) வசிக்காத வீடும் கெடும்.

50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.

52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.

53) பொய்யான அழகும் கெடும்.

54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

55) துடிப்பில்லா இளமை கெடும்.

56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

57) தூங்காத இரவு கெடும்.

58) தூங்கினால் பகலும் கெடும்.

59) கவனமில்லா செயலும் கெடும்.

60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு


Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 35

 பணத்தை எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதைவிட எப்படி செலவளிக்கிறோம் என்பதில் கவனம் கொள்ளுங்கள்"

ஒரு கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள்.

‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார்.

‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது. ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள்’’ என்று அப்பா சொன்னார்.

மகள் அதை ஏற்காமல் பதிலுக்குப் பேச, அப்பா அதற்கு விளக்கம் கொடுக்க, அது காரசாரமான விவாதமாகி விட்டது. கடைசியில் மகள், ‘‘நான் யாருக்கும் ட்ரீட் கொடுக்கலை. ஆனா நான் மட்டும் யாராவது ட்ரீட் கொடுத்தா வெட்கமே இல்லாம நல்லா தின்னுக்கிறேன். இப்ப உங்களுக்குத் திருப்தியா?’’ என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே போனார். அப்பாவின் குரல் பின்னால் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு வெளியே போனார்.

நகரத்தில் இலக்கே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். அவசரத்தில் மொபைல் போனையும் எடுத்து வரவில்லை. அது மாலைப் பொழுது ஆனதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இங்கும் அங்கும் சுற்றியதில் பசித்தது. பைக்கை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினார். பெரிய சாலையின் ஓரம் பெரிய நடைபாதை. நடைபாதையை ஒட்டி டீக்கடை இருந்ததால் பலர் அந்நடைபாதையில் நின்று கொண்டு பொறுமையாக டீ குடிக்க வசதியாய் இருந்தது. இவர் ஒரு டீயும் வடையும் வாங்கிக் கொண்டார்.

அப்போது அங்கே மூன்று ஆட்டோக்கள் வந்து நின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஆண்களும் பெண்களுமாய் பலர் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தினர் என்று அவர்கள் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.

அதில் ஓர் இளைஞன் உற்சாகமாய் டீக்கடையில் வந்து தட்டு தட்டாக சமோசாக்களும், உளுந்து வடைகளும் வாங்கி வாங்கி ஆட்டோவில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். சட்னியை அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்து ஊற்றினான். சமோசாக்களுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் தேவைப்பட்டபோது எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள்.

எல்லோரும் சாப்பிட்டபிறகு அந்த இளைஞன் பணம் கொடுத்தான். 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பேருக்கு 500 ரூபாய்க்குள் அவன் ட்ரீட் வைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தார்கள்.

 ‘பணம் செலவழிப்பதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உற்சாகமாய் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ‘எவ்வளவு செலவழிக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படி ஆழ்மனதில் இருந்து ரசித்து செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதையும் உணர்ந்தார். ‘நண்பர்களுக்கு பெரிய உணவகத்தில்தான் ட்ரீட் வைக்க வேண்டும் என்று போலித்தனமான கௌரவம் பார்த்து அப்பாவை வேறு மனக்கஷ்டப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினார்.

அவசரமாக வீட்டுக்குத் திரும்பியவர், பைக்கை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடிச் சென்றார். மகளைப் பார்த்து பதறிய அப்பா, ‘‘எங்கம்மா போனே? கவலைப்படாதே! நீ கேட்ட பணம் ரெடி பண்ணிட்டேன். ஆனா இனிமே எப்பவுமே இப்படி கோபத்துல பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்பாதே. அப்பாவுக்கு ரொம்ப பயமா இருக்கு’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது ஒரு குழந்தையாகத் தெரிந்தார்.

‘‘இல்லப்பா! ட்ரீட்டுக்கு இவ்வளவு பணம் வேணாம். நான் என் ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூப்பிடப் போறேன். நானே சமைச்சி நம்ம வீட்டு மொட்டை மாடில நண்பர்களுக்கு விருந்து வைக்கப்போறேன்’’ என்ற மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அப்பா.

‘உலகம் இவளுக்கு ஏதோ நல்லதாய் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார். ‘‘சாப்பிடுங்கப்பா, ருசியா இருக்கு’’ என்று அப்பாவுக்காக வாங்கி வந்திருந்த சமோசாவை நீட்டினார் அந்த அன்பு மகள்.எது தேவை,அந்தத் தேவையை சிக்கனமாக எப்படி கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.பெற்றோரின் நிலையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.பெற்றோர் உங்கள் மனம் கோணக்கூடாது என்பதற்காக பணம் ரெடி  செய்து கொடுத்துவிடுவார்கள்.ஆனால் நீங்கள் தான் எது அவசியம்,எது அனாவசியம்,ஆடம்பரம் என்பதைப் புரிந்து செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.இதுவும் எதிர்கால உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய "பணத்தை திறம்பட நிர்வகிக்கும் கலையே" என்பதை மனதில் கொள்ளுங்கள்.பெற்றோரும் இதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்து புரிய வைக்க வேண்டும். இருவருமே சிந்திக்க வேண்டிய விஷயம் இது.