Saturday, August 15, 2020

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 28

 சித்த மருத்துவத்தில் நோய் பரவாமல் தடுக்க அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்:
*************

1. கைகளை பச்சை மஞ்சள், வேப்பிலை ( கிருமி நாசினி, நுண்ணுயிர்கொல்லி) இரண்டும் அரைத்து கலந்த நீரில் கழுவலாம்

2. குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் சிறுது மஞ்சள், வேப்பிலை அல்லது எலுமிச்சை சாறு கலந்து குளிக்கவும்

3. ஒரு சிறு வெள்ளைத்துணியில் மஞ்சள், அமுக்கரா, அதிமதுரம் பொடிகளை சம அளவில் கலந்து பொட்டணமாய் அடிக்கடி முகர்ந்தால் prophylactic ஆக செயல்பட்டு பிணி அணுகா வண்ணம் செய்யும்

4. உணவே மருந்து எனும் படி அன்றாட உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி விதை, மிளகு, பெருங்காயம்

சேர்த்துக்கொள்ளுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்

5. ரசம் ஒரு அருமையான அருமருந்து. 

மிளகு ரசம், திப்பிலி ரசம் இவற்றை அருந்தலாம்.

மஞ்சளில் உள்ள curcumin  Anti-oxidant - நோய் எதிர்ப்பாற்றல் தூண்டக்கூடியது. 

மிளகின் piperin, பூண்டில் உள்ள கந்தகச்சத்து, புரத அமினோ அமிலங்கள் நோய் தடுப்பாற்றல் சக்தி கொண்டது.

திப்பிலி ரசம் முக்கியமாய் சுவாசக்கோளாறு, இருமலுக்கு மிக நல்லது.

6. நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் விட்டமின் 'சி'  நிறைந்த நெல்லிக்காயை சாறெடுத்தோ அல்லது தேனில் ஊற வைத்தோ உண்ணலாம்.  எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை பழங்களோ அல்லது அவற்றின் சாறுகளை தயாரித்து அருந்தலாம்

7. தேங்காய்பாலில் உள்ள "லாரிக் அமிலம், மோனோ லாரின் போன்றவை தாய்பாலிலும் காணப்படுவதால் உணவில் சேர்ப்பதால் குழந்தைகட்கு ஒரு அமிழ்தம் என்றே சொல்லலாம். 

8. உரை மாத்திரையை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு தாய்ப்பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் உரசி கொடுக்கலாம். மற்றும் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகட்கு தேனில் குழைத்து  கொடுக்க நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்

9. கற்பூரவல்லி இலைகளின் சாற்றுடன் தேன் கலந்து சுரசம் செய்து அன்றாடம் குழந்தைகட்கு கொடுக்க சுவாசப்பிரச்சனை வராது தடுக்கலாம்

10. வீட்டின் சுற்றுப்புறத்தின் காற்று மாசுபடுவதை தடுக்கும் துளசி, நொச்சி, கற்பூரவல்லி, வேம்பு செடிகளை வளர்த்தல் நலம்

11. மாலை வெயிலில் புற ஊதாக்கதிர்களின் ஆதிக்கம் குறைவாய் இருப்பதால்,  மாலை நேரத்து நடைப்பயிற்சி , விளையாட்டு நல்லது. வெயிலினால் கிடைக்கும் விட்டமின் ‘டி’ உடலுக்கு வலு சேர்க்கும் 

12. சளி,  மூக்கில் நீர் கசிதல், இருமல் அறிகுறி காணபட்டால் உடனே சுத்தமான வெள்ளைத்துணியினை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து காய வைத்து உலர்த்தி அதனை முகரலாம். வேப்பிலை, மஞ்சள் போட்டு வெது நீரில் வேது பிடிக்கலாம்

13. தேங்காய் எண்ணையை காய்ச்சி அதனுடன் இடித்த கற்பூரம் கலந்து உள்ளங்கை, முன் நெற்றி, மூக்கு, நெஞ்சுப்பகுதிகளில் தடவலாம்

14. தொண்டை வலி, சளி தென்பட்டால் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து சாப்பிடலாம்.  ஆடாதோடை மணப்பாகு (சித்த மருத்துவரின் தகுந்த ஆலோசனையுடன்) அருந்தலாம். 

15. சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, தீர்க்க சுவாசம், திருமூலர் பிரணாயாமம், போன்ற மூச்சுப்பயிற்சிகளை அன்றாடம் செய்து வருவது நல்லது 

16. மன அழுத்தம், நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும். பயத்தை விட்டொழியுங்கள்.  மகிழ்வாய்,  மனதை இளகுவாய், குதூகலமாய்  வைத்துக்கொண்டாலே ஹேப்பி ஹார்மோன்களான எண்டார்பின், டோபமைன், செரடோனின்  போன்றவை நன்கு சுரந்து நோய்களை அடித்து துரத்தி விடும். 

“வருமுன் காப்போம் “ என்ற பொன் மொழிக்கேற்ப சித்த மருத்துவம் காட்டும் பிணி அணுகா விதி முறைகளை கடைபிடித்து சீரான வாழ்வு வாழுங்கள்! 

வானம் மட்டுமின்றி வாழ்வும் வசப்படும்!



No comments:

Post a Comment