Saturday, August 15, 2020

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 27

 How to save/invest

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் இன்வெஸ்ட்மெண்ட் ஆலோசகர் அல்ல. நான் இனிமேல் தான் அந்தப் பக்கமே போகப் போகிறேன். நிறைய நண்பர்கள் என்னிடம் முதலீடு எப்படி செய்ய வேண்டும் எனக் கேட்கிறார்கள். எனக்குத் தெரிந்தது எல்லாம் பழமையான முறைகள் தான். வீட்டு மனை அல்லது வீடு, தங்கம் மட்டும் தான்.

ஆனால் எனக்கு பணத்தை எப்படி சிக்கனமாக செலவழிக்க வேண்டுமென்று வாழ்க்கை, வாயில் சாணியில் முக்கிய செருப்பை கவ்வக் கொடுத்து, விளக்கமாறு பிய்யப் பிய்ய அடி கொடுத்து கற்றுக்கொடுத்திருக்கிறது. அதில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன். இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. தவறுகளும் இருக்கலாம்.

1. உணவுக்கான செலவு நம் மாத வருமானத்தில் 20% ஐ தாண்டக்கூடாது. இது பேச்சிலர்களுக்கு அல்ல. குடும்பத்திற்கு. பேச்சிலர் எனில் 10-15% தான்.

2.உடைகளுக்கு பெரிய முக்கியத்துவம் தரத் தேவையில்லை. தேவைப்படும் இடம் /சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் நல்ல உடைகள் வாங்கிக் கொள்ளலாம். பிராண்டட் ஷோரூம், போத்தீஸ் போன்றவைகளுக்கு போகக்கூடாது. சென்னை என்றால் பாரிஸ் கார்னர், மதுரை என்றால் விளக்குத்தூண் போன்ற இடங்களில் வாங்கினால் அதே உடைகளை 40% குறைவான விலையில் எடுக்கலாம்.

3. மளிகைப் பொருட்கள் போன்றவை சில 6 மாதம் தாங்கும், சில 3 மாதம் தாங்கும். எங்கு விலை மலிவாக கிடைக்கிறது என கண்டறிந்து அங்கே வாங்கப் பழகிக்கொள்ள் வாண்டும். மொத்தமாக மொத்தக் கடைகளில் (இங்கிருந்து தான் ஏரியா கடைகளுக்கு பொருள் வரும்) வாங்கினால் 20-30% விலை குறைவாக இருக்கும்.

4. காய்கறிகளைப் பொருத்தவரை சீசனல் காய்கறிகளை வாங்குவதே சிறந்தது. வீம்புக்காக முருங்கைக்காய் கிலோ 400 ரூபாய் விற்கும் போது வாங்கி சாம்பார் வைக்கக்கூடாது. நாலு காய் 10 ரூபாய்க்கு விற்கும் போது வாங்கினால் போதும். அதே போல் பழங்களும். அதனதன் சீசனில் குறைவான விலையில் இருக்கும் போது வாங்கினால் போதும்.

5. மருத்துவ செலவு மிக முக்கியமான செலவாக மாறும் சூழலில் இருக்கிறோம். தினமும் வீட்டில் உள்ள எல்லோரும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொண்டால் அந்த செலவு குறையும். வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிபனுக்கு கொடு என்பார்கள். வைத்தியனுக்கும் கொடுக்காதே வாணிபனுக்கும் கொடுக்க வேண்டியதை மட்டும் கொடு என்பதே நம்மைக் காப்பாற்றும்.

6.பிரீமியம் என்பார்களே அதன் பக்கமே தலை வைக்கக் கூடாது. உதாரணமாக ஒரு படத்திற்கு முதல் நாள் டிக்கெட் 500 ரூபாய் எனில் மூன்றாம் நாள் 120 ரூபாய் தான். செயற்கைத் தட்டுப்பாட்டை நாம் ஊக்குவிக்கவே கூடாது.

7. தேவைப்படாத ஒன்றை வாங்கவே கூடாது. நாம் ஒரு பொருளை வாங்கிவிட்டால் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அடுத்த விநாடியே அது செகண்ட் ஹேண்ட் ஆகிவிடும். ஒரு முறைக்கு இரு முறை யோசித்து, இதை வாங்குவதால் நமக்கு ஏதாவது வேலை நேரம் குறையுமா, இப்போது இருக்கும் பிராசஸையே சிக்கனமாக இதில் செய்ய முடியுமா? என ஆராய்ந்து வாங்க வேண்டும்.

8. சிறுக கட்டி பெருக வாழ் என்பார்கள். அதாவது மிக ஆடம்பரமாக பெரிய அளவில் வீடு கட்டி, அதன் மெயிண்டனன்ஸ் போன்றவற்றிற்கு சிரமப்படுவதை விட அடக்கமாக தேவையான அளவில் கட்டிக்கொள்வது நல்லது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாங்கள் வாழும் ஊரில் நிச்சயம் ஒரு சொந்த வீடு சிறியதாகவாவது அவசியம். ஏனென்றால் ஓய்வு பெற்றாலோ,வருமானம் குறைந்தாலோ,வேலை இழப்பு ஏற்பட்டாலோ மற்ற செலவுகளைக் குறைத்து சாப்பாட்டு செலவோடு நிறுத்தி, அடுத்த வாய்ப்பு தேடலாம். வாடகை குறைக்க முடியாத ஒன்று.

9.விலை மதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வீட்டு மனை வாங்கி, பின்னர் பேங்க் லோன் எடுத்து அடக்கமாக வீடு கட்டிக்கொள்வது நல்லது. கடனுக்கான ஈ எம் ஐ கட்டி முடிக்கும் போது நமக்கு அது ஒரு நல்ல சொத்தாக இருக்கும். அத்தனை வருட வாடகையும் மிச்சம். அபார்ட்மெண்ட் வாங்குவதின் சாதக/பாதகங்கள் இன்னும் விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது.

10. திருமணத்தில் பெரிய செலவு கூடாது. பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் நொண்டியடிக்க திருமண செலவு ஒரு பெரிய காரணியாக இருக்கிறது. சிம்பிளாக திருமணம் செய்துவிட்டு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒரு விருந்து ஏற்பாடு செய்வது நல்லது. ஆனால் இதை சமூக காரணங்களுக்காக இரு வீட்டாரும் ஒத்துக் கொள்வதில்லை. எப்படியாகினும் சுருக்கமாக செய்து கொள்வது நல்லது.

11. வீட்டில் ஆளாளுக்கு ஒரு ரூமில் பேன்,லைட் போட்டு மொபைல் பார்ப்பது, வெவ்வேறு நேரங்களில் சாப்பிடுவது, சமைப்பது, சூடு பண்ணுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிறுதுளி தான் பெருவெள்ளம். நம் பொருள் வீணாவதும் குறையும், மானிடர் அனைவருக்கும் பொதுவான வளத்தையும் நாம் பாதுகாப்பது போலவும் ஆகும்.

12.சிக்கனமாக இருப்பதை பலர் கிண்டல் செய்வார்கள். அதை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது. நமக்கு ஒரு சிக்கல் வந்து பணத்திற்காக யாரிடம் கையேந்தி நிற்பதை விட சிக்கனமாய் இருப்பது தவறொன்றுமில்லை.

13. ஒன்றிரண்டு வருடங்கள் சேமிப்பதை ஒரு நல்ல தொகையாக வங்கியிலோ, தங்கமாகவோ மாற்றி விட்டால், நமக்கே ஒரு கான்பிடன்ஸ் வரும். சேர சேர பணம் தன்னை தானே வளர்த்துக் கொள்ளும் சக்தியுடையது.

35 வயது வரை இப்போது நான் சொன்னவற்றிற்கு எதிரிடையாகவே நடந்து வந்தேன். பின்னர் உணர்ந்து,கடந்த 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டுடன் நடந்து, பழைய கடன்களை அடைத்து இப்போது லெவல் ஜீரோவிற்கு வந்திருக்கிறேன். திரும்பிப்பார்த்தால் இப்போது புதிதாக வேலைக்கு சேர்பவரிடம் என்ன சேமிப்போ அதுதான் என்னிடம். என்ன இரண்டு குழந்தைகளை வளர்த்திருக்கிறேன். அவ்வளவு தான். ஆனால் முதல் 15 ஆண்டுகள் நான் ஒழுங்காக இருந்திருந்தால், இப்போது என் செட் ஆட்களோடு பொருளாதாரத்தில் சரிக்கு சமமாய் நின்றிருப்பேன்.

அந்த ரேஸில் நான் பின் தங்கி விட்டேன். என்னிடம் ஆலோசனை கேட்கும் நண்பர்களுக்கு சொல்லப்போவது அதுதான். ரேஸில் பின் தங்கி விடாதீர்கள்

No comments:

Post a Comment